ஆஸ்டினில் இந்த தம்பதியரைத் தெரியாதவர்கள் மிகச் சிலரே. தாத்தா பாட்டி என குழந்தைகளாலும் மாமா, மாமி, அங்கிள், ஆண்ட்டி எனப் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள். பல ஆஸ்டின் குடும்பத்தாருக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்கள். தங்கள் அன்பை அனைவருக்கும் அள்ளி கொடுப்பவர்கள். தமிழ் மற்றும் இந்திய நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு கொண்டு அனைவரையும் ஊக்கப்படுதுவர்கள். அவர்கள்தான் முனைவர் திரு.தியாகராஜன் மற்றும் அவர் மனைவி சுஹாசினி அவர்கள். திரு.தியாகராஜன் தங்களின் நீண்ட அமெரிக்க வாழ்க்கை பற்றியும் இங்குள்ள தமிழ் குழந்தைகள் பற்றியும் சில கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
முனைவர் திரு.தியாகராஜன் அவர்கள் கும்பகோணத்தில் தாத்தா (அம்மாவின் தந்தை) வீட்டில் பிறந்தார். அவர் தந்தை தஞ்சாவூர் மாவட்ட பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர். பள்ளிப்படிப்பு தஞ்சையிலும் (திருவாரூர், குத்தாலம் ) திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டெர்மீடியட் படிப்பும் முடித்தார். பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியாளர் (மெகானிக்கல்) பட்டம் பெற்றார்.
அவர் மணைவி சுஹாசினி மதுரையில் பிறந்தவர் ஆயினும் குழந்தை பருவம் முதல் மும்பையில் வளர்ந்தவர். அவரது தந்தை திரு S.A.ஐயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இரண்டாம் உலகப் போரின் பொழுது உடன் இருந்தவர். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1947ற்க்குப் பின் அவர் மும்பை திரைப்பட தணிக்கைத் துறையில் பணிபுரிந்தார். திருமதி சுஹாசினி மும்பையிலேயே வள்ர்ந்து எல்பின்ஸ்டோன் (Elphinstone) கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.
தியாகராஜன் ஆரம்பத்தில் மும்பை அணுசக்தி மையத்தில் பணிபுரிந்தார். பின் 1968ல் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்க்காக வந்தார். டெலாவரில் முதுகலை பட்டம் மற்றும் பஃபல்லோவில் (Buffalo)ல் இப்போது “Applied Physics” என சொல்லப்படும் பாடத்தில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார்.. 1973ல் முனைவர் பட்டம் பெற்றதும் இந்தியா திரும்பினார். சென்னையில் அவர் திருமணம் நடந்தது. சிலகாலம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த பின்பு மீண்டும் அமெரிக்காவிற்கு ஆராய்ச்சிக்கென வந்தார்.
இருவரும் 1977ல் இருந்து அமெரிக்காவில் நியு யார்க், அலபாமா, நியு ஜெர்ஸி மற்றும் டெக்சாஸ் போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில் கிராண்ட்பரி,ஃபோர்ட்வொர்த் ஆர்லிங்டன்,ஆஸ்டின்,இரவுண்ட் ராக் ஆகிய இடங்களில் 1985 முதல் வசித்து வருகின்றனர.
அவர்கள் 1996ல் ஆர்லிங்டனிலிருந்து ஆஸ்டின் பல்கலைக்கு வந்த போது இது ஒரு சிறிய ஊர். ஆனால் இந்த 15 வருடங்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் கிடைக்காத வாய்ப்புகள் இப்போது கிடைப்பது மிகவும் சந்தோசத்திற்குரியது. மேலும் மிகச் சிறந்த கல்வி, வேலை வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் கிடைக்கிறது. ஆஸ்டினும் இரவுண்ட் ராக்கும் பாதுகாப்பான முன்னேற வாய்ப்பு கொண்ட நகரங்களாக கருதுகின்றார்.
திரு.தியாகராஜன் முதன்முதல் வந்த காலகட்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிகவும் குறைவு.வாழ்ந்த புறநகரங்களில் தமிழர்கள் மிகச் சிலரே இருந்தனர். இங்கு மருத்துவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் பலர் மருத்துவர்கள்.இந்திய கலாச்சார நிகழ்வுகள் மிகச் சில இடங்களிலேயே நிகழ்ந்தன. அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க அவர்கள் மணிக்கணக்கில் பயணித்து இருந்திருக்கிறார்கள். சில சமயங்களில் அண்டை மாநிலங்களுக்கும் சென்றதுண்டு. இதனால் சில இந்திய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இங்கே உள்ள கலாசாரத்துடன் ஒன்றிப் போகவேண்டிய சூழல். இப்பொழுது பல இலட்ச இந்திய மக்கள் இங்கே உள்ளனர் (எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இண்டெர்னெட்ற்கு நன்றி கூறுகிறார்). மேலும் குழந்தைகள் நமது சமய, சமூக, கலாசாரத்தை நன்கு உணர நிரைய வாய்ப்புகள். நமது மக்கள் இந்திய பாரம்பரியத்தை கட்டிக்காப்பதோடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இரண்டாம் உலகப் போரின் பொழுது உடன் இருந்தவர். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.”
இங்குள்ள குழந்தைகள் நம் நாட்டில் உள்ளவர்களைப் போன்றே அனைத்து வகைகளிலும் உள்ளனர். இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மிக மேன்மையான பங்கு வகிக்கின்றனர். உயர்ந்த கல்வி கொடுப்பது மட்டுமன்றி இந்திய கலைகளான நாட்டியம், சங்கீதம், சமய செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகின்றனர். ஆரம்ப காலங்களில் கிடைக்காத வாய்ப்புகள் இப்போது கிடைப்பது இவர்களுக்கு மிகவும் சந்தோசத்தை தருகிறது.
இங்குள்ள குழந்தைகள் வீட்டில் தாய்மொழியான தமிழை விட ஆங்கிலத்தில் சரளமாக இருப்பது பற்றி திரு.தியாகராஜன் சொல்லும்போது தமிழ் ஒரு கவித்துவம் மிக்க மொழி. தமிழ் இலக்கியம் வளமானது.பல சமய வரலாறுகளை தன்னிடம் கொண்டது. ஆனால் பெரும்பான்மையான இந்திய மொழிகள் (தமிழ் உட்பட) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இயல்பாக ஒத்துப்போக முடிவதில்லை. குழந்தைகள் மேற்கத்திய மற்றும் பல்வகை இன சூழல்களிடையே இருப்பதால் அவர்களிடையே ஆங்கிலம் தவிர்க்க முடியததாய் உள்ளது. நம் கலாசாரம் , பாரம்பரியத்தை காக்க அவர்களை வீட்டில் தமிழில் பேச உற்சாகப்படுத்த வேண்டும்.
மேலும் அவர் கூறினார், ஆஸ்டின் தமிழ் சங்கம் மற்றும் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியும் இணைந்து நம் குழந்தைகளிடையே தமிழ் கல்வி , கலாசாரத்தை கற்க பெரும் பங்கு வகிக்கிறது. இந்த கல்வி அவர்களின் வருங்கால வாழ்வில் அணைத்து பருவங்களிலும் முக்கியமான அங்கம் வகிக்கும்.
இறுதியாக அவர்கள் கூறியது: உலகம் மிக வேகமாக வளர்கிறது. இயற்கை வளங்களை பாதுகாப்போம். நல்ல குடிமக்களாக வாழ்வோம். நம்முடைய முன்னோர்களின் நற்செயல்களும் கடின உழைப்புமே நம்மை இங்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. அத்தகைய நற்பண்புகளை சேகரித்து குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். (முற்றும்)