தன் ஆசை மகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை உணராத தாய் விதவிதமாய் உணவுகளை ஆல்டோவுக்கும் அவன் நண்பர்களுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் பல மணி நேர கொண்டாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராய் விடை பெற்றுக் கொண்டார்கள். அளவுக்கதிகமான உணவு மற்றும் மது ஆல்டோவை நிலை தடுமாற வைத்தது. வீட்டின் பின் புறத்திலே தரையில் படுத்து விட்டான். கடின உழைப்பு அதற்கேற்ப உணவு என்று பழக்கம் கொண்ட ஆல்டோ சராசரியை விட சற்று பருமனான உடம்பு கொண்டவன். எல்லோரும் புறப்பட்ட பின்பு, மகனை மட்டும் வீட்டிற்குள் கொண்டு வர எவ்வளவு எழுப்ப முயன்றும், போதையில் இருந்த ஆல்டோவால் எழுந்து வர முடியவில்லை.
“நான் இங்கே படுத்துக்கிறேன்..” என்று உலறிய மகனை தூக்க முடியாமல், குளிருக்கு வெதுவெதுப்பாய் கனமான போர்வையால் மூடிவிட்டு, அன்று முழுவதும் பார்ட்டிக்காக சமையல் செய்த களைப்பு, அவளும் படுத்த உடன் ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்து விட்டாள்.
டிசம்பர் 25 காலை… உடல் அசதியோடு எழுந்த வெரானிக்காவிற்கு சன்னல் வழியே தெரிந்த அந்த வெள்ளைப் பனிப் பொழிவு கண்ணுக்கு அழகாகவும், மனதுக்கு ஒரு ரம்மியத்தையும் கொடுத்தது. அப்போது தான் தன் மகன் ஆல்டோ வெளியே படுத்திருந்தது நினைவிற்கு வர, பதறியடித்துக் கொண்டு ஓடினாள். அவன் இன்னும் அப்படியே படுத்திருப்பதைக் கண்டு,
“தம்பி.. ஆல்டோ.. எழுந்திரி.. பனி பெய்யுது.. உள்ளே வா..” ஆனால் அவன் இன்னும் போதையில் இருந்தான். அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் ஒரு மயக்க நிலையிலே இருந்தான். வெரானிக்காவிற்கு ஒரு பயம் ஏற்பட்டது. மூச்சு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு அதிக சிரமத்தோடு, குப்புற படுத்திருந்த அவனை புரட்டிப் போட்டாள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள். பெரிய போராட்டத்திற்குப் பிறகு அவனைக் கொஞ்சம் கண் விழிக்க வைத்து பேச வைத்தாள்..
“ஆல்டோ.. எந்திரி.. உள்ளே வா..” என்று பல முறை பதட்டத்தோடு எழுப்பிய பிறகு.. உலறலாக..
“முடியலம்மா… ஒடம்பு வலிக்குது..” என்றான் ஆல்டோ..அவனைத் தூக்க முயன்றவளுக்கு, அவன் பருமனான உடலைத் தூக்க முடியவில்லை. ஆனாலும் போராடிப் பார்த்தாள். அப்போது உயிர் போகும் வலியை உணர்ந்த ஆல்டோ..
“அம்மா கை வலி உயிர் போகுது.. என்ன விடு.. என்னால முடியல..” என அலற ஆரம்பித்தான். அப்போது தான் கவனித்தாள் ஆல்டோவின் வலது கை சற்று வீக்கமாகவும், வெளிறியும் இருந்தது. சற்று பருமனான ஆல்டோவுக்கு இப்போது வீக்கமாகி இருந்த கை மேலும் பருமனாய் இருந்தது. அவன் கையைத் தொட்ட உடன் உயிர் போகும் வேதனையில் அலறினான். நிலைமை மோசமாய் இருப்பதை உணர்ந்த வெரானிக்கா விரைவாய் 911-ஐத் தொடர்பு கொண்டு சூழ்நிலையை விளக்கினாள். அடுத்த சில நிமிடங்¦களில் ஆம்புலன்ஸ் வந்தது. அவசர சிகிச்சை அளித்து ஆல்டோவை ஒரு ஸ்டெச்சரில் வைத்து அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுத் தேவையான எல்லா சிறப்பு மருத்துவர்களும் பரிசோதித்தார்கள்.
“யாரு பேஷன்டோட கார்டியன்..”
“இவங்க தான் டாக்டர்..”
“அம்மா.. உங்க பையனுக்கு கம்பார்ட்மெண்ட் சிண்ரோம்” என்று சொல்ல ஆரம்பித்த உடன்..
“நோ இங்கிலீஸ்..” என்ற வெரானிக்காவிற்கு, “நர்ஸ் ஸ்பேனிஸ் டிரான்ஸ்லேட்டரைக் கூப்பிடுங்க..” மருத்துவர் டிரான்ஸ்லேட்டரிடம் பிரச்சனையைக் கூறி ஸ்பேனிசில் விளக்கப் பணித்தார்.
அந்த மொழிபெயற்பாளர்…. “அம்மா நீங்க மனச கொஞ்சம் திடப்படுத்திக்கிங்க… ஒங்க பையன் ஒரு பக்கமாய் படுத்திருந்ததாலே அவருடைய வலது கை, உடல் பழுவினால் அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஒட்டம் அதிக நேரம் தடை பட்டிருக்கு… அதனால வீக்கம் ஏற்பட்டு, நரம்பகளைம், இரத்தக் குழாயையும் பாதிச்சு ரொம்ப நேரம் கையில் இரத்த ஓட்டம் சுத்தமா நின்னு போச்சு.. வலது கை முற்றிலும் செயல் இழந்து போச்சு.. இனி அதை சரி செய்ய முடியாது.. போக, அந்தக் கையை இப்ப எடுக்கணும் இல்லாவிட்டால் அந்த பாதிப்பு உயிருக்கு ஆபத்தா முடியும்…” இதைக் கேட்ட வெரானிக்காவிற்கு உயிரே அவளை விட்டு பிரிவதாய் இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் சித்த பிரமை பிடித்தவள் போல் இருந்தாள்.
“அம்மா.. நீங்க கொஞ்சம் பார்ம்ஸ்ல கையெழுத்துப் போட்டா மேல் சிகிச்சையத் தொடங்¦கலாம்..”
“அய்யா.. எப்படியாவது அவன் கைய சரி பண்ணிருங்க…” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
“நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்.. இனி வேற வழி இல்லை.. ஆப்ரேசன் பண்ணி கை எடுக்காட்டி உயிருக்கே ஆபத்து..” என்ற மருத்துவரின் விளக்கத்தைக் கேட்டு, உயிரற்ற ஜடமாய் சில கையெழுத்துகளைப் போட்டு விட்டு.. அந்த உயிர் காப்பு பிரிவில் காத்திருப்புப் பகுதியில் கண்ணீர் தாரை தாரையாய் ஓட அழுது கொண்டிருந்தாள் . ஊரே வெள்ளைக் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் வெரானிக்காவுக்கு மட்டும் அது கருப்பு கிறிஸ்துமஸ் ஆனது.