How I conquered a silent killer against all odds with Naturopathy – Smt. Kanna Bala

இயற்கை மருத்துவம் –  கண்ணா பாலா

தமிழாக்கம் — ஷங்கர் சிதம்பரம்

 

பிப்ரவரி 26, 2010 எனக்கு ஒரு மறக்க முடியாத நாள். அன்று காலை 9 மணிக்கு எனது மகப்பேறு மருத்துவரை பார்த்தப்பின் என் வேலைக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தேன். என் வேலை நிமித்தமான யோசனைகள் என்னை  ஆக்கிரமித்திருந்தன. அவற்றை புறந்தள்ளி எனது மருத்துவருக்கான கேள்விகளை யோசிக்க வேண்டும். பரிசோதனை மேசையில் படுத்திருந்த போது எனது வயிறு உப்பியிருப்பதை கவனித்தேன். கர்ப்பினிப் பெண்ணின் வயிறு போல் உப்பியிருந்தது. இதனால் எனக்கு பல தர்மசங்கடமான கேள்விகளும், உடம்பு இளைக்க ஆலோசனைகளும் பல பேரிடமிருந்து கிடைத்தன. அது மட்டும் தானே இலவசம்.

 

வயிறு இயல்புக்கு மாறாக உப்பியிருந்ததால் மருத்துவர் என்னை மீயொலி (ultrasound ) பரிசோதனைக்கு அனுப்பினார். பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓட ஒரு படபடப்புடனே அச்சோதனை முடிந்தது. அப்பொறியாளர்  சோதனை முடிவில் எந்தவித முன்னறிவிப்போ, முன்னேற்பாடோ இன்றி எனக்கு சூலகப் புற்றுநோய் (Ovarian Cancer ) இருப்பதாக போட்டுடைத்தார்.

 

“எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீகள்” எனக்கேட்டதற்கு , திசுக்களின் வளர்ச்சியும், வடிவும் புற்றுநோயின் அறிகுறியையே காட்டுகிறது எனக் கூறினார்.பேரிடி தாக்கியதை போல நிலைகுலைந்தேன். புற்றுநோயை பற்றி சிறிதே அறிந்திருந்தாலும், இவ்வகைப் புற்றுநோய் உள்ளவர்கள் பிழைப்பது அறுதி என மட்டும் தெரியும்.இது உண்மையாக இருக்ககூடாது என வேண்டினேன். 15 வருட மருத்துவ அனுபவம் உள்ள என் சகோதரியின் மகளை தொலைபேசியில் அழைத்தேன். அவளுக்கு தெரியும் இதில் தவறுள்ளது என்று.

 

உண்மையை ஒப்ப மறுத்தேன். அவளோ மேலும் பல பரிசோதனைகளை செய்யும் படி கூறினாள். எனது மகப்பேறு மருத்துவரை மறுபடியும் ஆலோசித்து, இரத்தப்பரிசோதனை மற்றும் இதர பல சோதனைகள் செய்து முடிவில் அனைத்தும் உறுதியாயிற்று.

 

புற்றுநோயேதான்!!!  நோயின் அளவுக்குறியீடு (Cancer marker CA-125) 442. இயல்பாக 35 க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆலோசித்த அனைவரும் இதையே உறுதி செய்தனர். ஒருவராவது ” இல்லை. இது புற்றுநோய் இல்லை. ஏதோ தவறு நடந்துள்ளது ” எனசொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ம்ம்ஹூம். நடக்கவில்லை.

 

என்னவரிடம் சொல்ல தைரியம் இல்லை. தாங்கமாட்டார். ஆனால் அவரே அழைத்தார், சொன்னேன், நம்பாததால் அவரே நேரில் வந்து பார்த்து கலங்கினார்.இதுவரை எந்த இடையூறும் சந்தித்ததில்லை, எந்த கஷ்டங்களும் அனுபவித்ததில்லை. என் தந்தை எனை வளர்த்த விதம் அப்படி. நல்லதா? கெட்டதா? தெரியவில்லை. எப்படிஎதிர்கொள்வது? தெரியவில்லை. என்ன தேவை? என்ன செய்வது? எதுவும் தெரியவில்லை.

 

5 வருடங்களாக இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் வேலை. அந்நோய் எனக்கு வந்தால் என்ன செய்வேன் என்று எண்ணிப் பார்த்ததுண்டு. அவர்களின் வலியையும், படும் அவதியையும் பார்த்துப் பார்த்து வருந்தியதன் விளைவு? எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் எடுத்துகொள்ள மாட்டேன் என்று நினைத்ததுண்டு. வலியுடன் அவதிப்பட்டு வாழ்ந்து என்ன பயன்?

 

மாற்று மருத்துவத்தில் நம்பிக்கையுண்டு, ஆனால் எங்கே தொடங்குவது? முதலில் ஒரு இயற்கை மருத்துவரை அழைத்து கேட்டேன். அவர் இரசாயன சிகிச்சை (Chemo Therapy) யின் போது உதவக்கூடிய ஊட்டசத்து மற்றும்  மாத்திரைகளையே பரிந்துரைத்தார்.அந்த சிகிச்சை முறையே வேண்டாம் என்ற முடிவில் இருந்த எனக்கு அது போதுமானதாகப் படவில்லை. ஹோமியோபதியிலும் எதுவும் சரிப்படவில்லை. ஆகவே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டேன்.

 

மருத்துவர்கள் நிறைந்த என் குடும்பத்தினர் தேர்ந்தெடுத்த ஒரு நிபுனரால் மார்ச் 16, 2010-ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பின் என் குடும்பத்தின் உதவியால் சிரமமில்லாமல் தேறிவந்தேன்.ஆனால் இந்த அறுவை சிகிச்சை என்பது ஒரு பெரிய புதிரின்ஒரு பாகம் மட்டுமே.சிகிச்சைக்கு பின் திசு ஆய்வின் (Biopsy) முடிவுகள் வரத்தொடங்கின. என் மருத்துவர் M.D. Anderson புற்றுநோய் மையத்திலும் கருத்துக்களை கேட்டறிந்து எனது 3- ஆம் நிலை “C ” பிரிவு புற்றுநோயை உறுதி செய்தார்.

 

மிக வேகமாக வளரக்கூடிய  (Clearcell Carcinoma) வகை புற்று நோய். இந்நோய் இரசாயன சிகிச்சை (Chemo Therapy)யினால் அவ்வளவாக கட்டுப்படுத்த முடியாது. மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. மேலும் இந்த புற்றுநோய் எனது இரத்தத்திலும் பரவியிருக்கிறது, அதனால் மேலும் பல உறுப்புகளுக்கும் பரவும் வாய்ப்பும் அதிகம். நிதர்சனமான உண்மை என்னவென்றால் நான் இன்னும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளே உயிர் வாழ முடியும், அதுவும் வலி நிறைந்த மருந்து மற்றும் மருத்துவமனை என அல்லாடி அவதிப்படும் 3 ஆண்டுகளே என் வாழ்வு.

 

எனது மருத்துவ முடிவுகளை கொண்டு , மேலும் பல நிபுணர்களை ஆலோசித்தும் எந்த நல்ல செய்தியும் இல்லை. ஆராய்ச்சி நிலை மருந்துகளை முயற்சிக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை.இவை அனைத்தும் எனக்கு நேர்ந்தபோதும் நான் உடைந்துவிடவில்லை. “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற கேள்வி எழவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடனே நாட்கள் சென்றன.

எனக்கு புற்றுநோய் என்ற செய்தி இந்தியாவில் எனது உறவினர் மற்றும் நண்பர்களிடையே தீயாக பரவியிருந்தது. மிக சிறிதே பரிச்சயமான உறவினர் ஒருவர் புற்றுநோயை குணப்படுத்தும் இயற்கை மருத்துவரை பற்றி கூறியிருந்தார். என் அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரிந்ததினால் அப்போது அதில்  நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது? எனக்கு வேறு வழியே இல்லை. தெரியவில்லை. அதனால் இயற்கை மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள முற்பட்டேன். அதைப்பற்றி பல வலைத்தளங்கள், புத்தகங்கள் மூலம் படித்து தெரிந்தேன். இதையும் முயற்சி செய்யலாமே எனப்பட்டது.

 

முடிவாக என் உறவினர் சிபாரிசு செய்த கோயம்புத்தூரில் உள்ள அந்த இயற்கை மருத்துவ மையம் சென்று சில காலம் தங்கி சிகிச்சை பெறலாம் என்று இந்தியாவிற்கு சென்றேன். குணமடைந்தால் நலம், இல்லையேல் இந்தியாவிலேயே என் இறுதிகாலம் வரை இருப்பதாக முடிவு செய்தேன். என் கணவர் பாலுவும், என் குழந்தைகளும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு.என் குடும்பத்தினர் அனைவரும் என்னின் இந்த முடிவிற்கு ஆதரவாக இருந்தனர். மற்றவர்களையும் சம்மதிக்க வைத்தனர்.

 

ஏப்ரல் 28, 2010, நான் கோயம்புத்தூர் வந்து இறங்கினேன். மருத்துவர் எனக்கு அளிக்கபோகும் சிகிச்சை பற்றி விவரித்தார். எந்த விதமான இயற்கை சிகிச்சைக்கும் தயாராக இருந்தேன். என் சகோதரிகள் என்னுடன் இருந்ததால் மருத்துவ சிகிச்சை என்பதைவிட ஒரு விடுமுறைக்கு சுற்றுலா வந்ததை போலவே உணர்ந்தேன்.சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, இயற்கை கொஞ்சும் மருதமலை அடிவாரத்தில் இருந்தது அந்த மையம்.

அதிகாலை 5:30 மணிக்கு எழுப்புவர், காலையில் நடைபயிற்சி, சூரிய வணக்கம், யோகா மற்றும் உடற்பயிற்சியுடன் அந்த நாள் தொடங்கும். இவை அனைத்தும் எனக்கு நிறையவே பிடித்திருந்தது.சூடான சுக்கு காபி எனது காபி பழக்கத்தை அறவே மறக்க செய்தது. தினமும் கொடுக்கும் அருகம்புல் சாறும் நன்றாகவே இருந்தது.

 

இவை அனைத்தும் முடிந்தபின் இயற்கை மருத்துவம் பற்றிய வகுப்புகள். அவையும் சுவராஸ்யமாகவே இருந்தன. மூன்று வேளையும் திராட்சை பழங்களே பிரதான உணவாயிற்று.முதலில் கடினமாக இருந்தாலும், பின்னர் அந்த திராட்சையே பழகிப்போனது. கட்டுப்பாடாக இருந்ததால் எனக்கே பெருமையாக இருந்தது, என் சுய கட்டுப்பாட்டை பாராட்டும் நண்பர்களின் உதவியால் மென்மேலும் கட்டுபாடுடன் இருக்க முடிந்தது.

 

மேல் தளத்தில் சூரியக்குளியல் (Sun Bath ) மற்றும் வாழை இலையில் நம் உடம்பை சுற்றி வைக்கும் சிகிச்சை முறைகள் மிகவும் பிடித்தது. நான் நினைத்ததை விட இச்சிகிச்சை முறைகள் சுலபமாகவும், விரும்பும்படியாகவும் இருந்தன.இந்த மையத்தில் ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் அனைத்திற்கும் ஒரே சிகிச்சை முறைதான்.

 

உணவுக் கட்டுப்பாடு மற்றும் பத்திய உணவின் மூலம் நம் இரத்தத்தை சுத்தமாக்குவதால், நம் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தியே புற்று நோயை எதிர்த்து போராடி சரியாக்கிவிடும்.வைட்டமின் க, த, மற்றும் இதர ஊட்டங்கள் இந்த எதிர்ப்புக்கு வலு சேர்க்கும்.எளிமையான சிகிசைமுறைதான். தெரிந்து கொள்ளத்தான் நாளாயிற்று.கோயம்புத்தூரில் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு, திருநெல்வேலியில் உள்ள என் தந்தை வீட்டிற்கு சென்றேன்.

 

இதுவரை ஒரு முப்பது பவுண்ட் எடை குறைந்திருந்தேன். ஆனாலும் நிறைவாய் உணர்ந்தேன். அங்கும் என் பத்தியத்தை தொடர்ந்தேன். நீண்ட நடைபயிற்சிகள் மற்றும் பத்திய உணவு. வெறும் பழங்கள் மட்டுமே என் உணவாயிற்று. அவ்வப்போது சிறிய அளவில் குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே. மேலும் பாத்து பவுண்டுகள் குறைந்தேன். இதர உணவு வகைகளை சாப்பிட ஆசை இருந்தாலும் பசி இல்லை.

 

என் சிகிச்சையின் கடைசி கட்டம் அமெரிக்காவில். ஆஸ்டினில் என் வீட்டிலிருந்தே பத்தியமிருந்தேன். ஆனால் கட்டுபாடாக இருக்க முடியவில்லை. பசி, கடும் பசி. அதனால்  தினமும் ஒரு வெண்ணை பழம், அதில் தக்காளி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை கலந்து சாப்பிட்டேன். kanna1

 

இதில் கொழுப்புச்சத்து அதிகம் இருந்தாலும் எனக்கு நிறைவானதாக இல்லை.குறைந்தது ஒரு வருடத்திற்காவது பழங்களும் , சிறிய அளவில் தானியங்களும்  மட்டுமே உணவாக பத்தியம் இருக்கவேண்டும் என்று இலக்கு வைத்திருந்தேன். அனால் நான்கு மாதத்திலேயே தவற ஆரம்பித்தேன். என்னால் முடியவில்லை, மேலும் பல உணவு வகைகளையும் சாப்பிட ஆரம்பித்தேன். என் எடையும் கூட ஆரம்பித்தது.

இரண்டு வருடங்களில் , நான் இழந்த 40 பவுண்டு மொத்த எடையும் மீண்டும் பெற்றேன்.இப்போது நான் அனைத்தையும் என் உணவில் சேர்த்து கொள்கிறேன், ஆனால்சிறிய அளவில்.நான் சைவமாதலால் அசைவம் மீது நாட்டம் இல்லாமலேயே போயிற்று.பருப்பு வகைகள், கடலை வகைகள், மற்றும் முழு தானிய வகைகள், பலன்கள் மற்றும் காய்கறிகளே எனது பிரதான உணவாயிற்று.

 

இப்பொழுது என் புற்றுநோயின் அளவுக்குறியீடு  (CA125)  10 க்கும் குறைவாகவே உள்ளது என்பதை பெருமையாக கூறுகிறேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என் மருத்துவரை பார்க்கிறேன். ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு நான் முழுவதுமாக புற்றுநோயிலிருந்து குணமடைந்து விட்டதாக சான்று கூறினார்.

 

இயற்கை மருத்துவத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

 

— கண்ணா பாலா , மே -2015

kanna

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter!!

[mc4wp_form id="8712"]
[wpforms id="9688"]