– சங்கீதா
இந்தியாவில் தொலைந்தவர்களை தேடும் இடம் தான் அமெரிக்கா. இங்கு வந்தால் தமிழ் மொழி, தமிழன் என்ற உணர்வு, உறவுகள், கலாச்சாரம், உணவு பழக்கங்கள் இது அனைத்தும் மறப்பர். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மோகம் கொள்வார்கள் இந்த வாழ்க்கையின் மீது. இரவா பகலா என்ற சந்தேகம் வராது. எப்பொழுதும் உற்சாகம், உல்லாசம். இதுதான் இந்த வாழ்க்கையின் மீது காலம்காலமாக வைக்கும் குற்றச்சாட்டுகள். இதிலிருந்து சற்று விலகி வேறு கோணத்தில் இந்த வாழ்க்கையே பார்த்தோமானால் பலவற்றை நாம் அறிய முடியும்.
இங்கு இந்திய வாழ்க்கையை போல் அதிக சவால்களை சந்திக்க வேண்டியதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து வித உரிமைகளும் நமக்கு இந்தியாவில் தந்து விட்டு, எந்த வித உரிமைகளையும் சரி வர நம்மால் பயன்படுத்த முடியாத வகையில் அரசியல் நம்மை அங்கு மாற்றி உள்ளது. உரிமைக்கு கூட குரல் கொடுக்க முடியவில்லை நம் சுதந்திர இந்தியாவில். உயிருக்கு பயந்து பயந்து தான் வாழும் நிலைமை அங்கே. நியாயம் கிடைக்க போராட்டம் செய்தால் அநியாயமாக நம்மை கொன்றேவிடுவார்கள். அன்றாட வாழ்க்கையில் அங்கு சந்திக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை எனலாம். உயிருக்கு போராடும் நிலைமையில் கூட நமக்கு உதவும் கரங்கள் மிகக் குறைவு. மனிதநேயத்தை மறந்து விட்டுத்தான் வாழவேண்டி உள்ளது நம் இந்தியாவில். இங்கும் ஊழல்கள் உள்ளது. ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத அளவில் தான் உள்ளது. இங்கும் உயிருக்கு பயந்து பயந்து தான் வாழவேண்டி உள்ளது. எந்த நேரத்தில் எவன் துப்பாக்கியால் சுட்டுவிடுவானோ என்ற நிலையும் உண்டு. ஆனால் இந்த நிலை மிகவும் குறைவான விகிதமே என்று கூறலாம்.
கலாச்சார சீர்கேடுகளின் புண்ணிய பூமி அமெரிக்கா என்ற ஒரு கூற்றல் இருந்தது, இப்பவும் இருக்கிறது. நம் இந்தியா, கலாச்சாரத்தில் முதல் இடம் என்றும் கூறுவர். ஆனால் நம் இந்தியா இப்பொழுது எங்கே போகிறது கலாச்சாரத்தில்?. வெட்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் சுற்றுலா சென்ற அமெரிக்க பெண் ஒருவர் NBC சேனலில் கூறுகையில்…
“பெண்களுக்கு இந்தியாவில் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பு அறவும் இல்லை. அங்கு சென்றிருந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை கற்பழிப்பிலிருந்து தப்பினேன். பார்பதற்கு பல இடங்கள் சொற்கமாக இருப்பினும் என்னால் பார்க்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன் ” என்றார்.
இதைவிட வேறு ஒன்றும் நம் இந்திய பெண்களின் நிலைமையே சொல்ல எடுத்துக்காட்டு தேவையில்லை எனலாம். இந்நிலையிலும் இந்தியாவை விட்டு வெளிவரா பல குடும்பங்களும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்கு நாம் கண்டிப்பாக நம் பாராட்டுதலை சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்த அமெரிக்க வாழ்க்கையில் நம்மை பெரிதும் ஈர்ப்பது ஒழுங்கு முறை, மக்களை மதிப்பது, தூய்மை, பாதுகாப்பு, அரசாங்க விதிமுறைகள் என இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு ஒழுங்கு முறையை எடுத்துகொண்டோமானால், கண்டிப்பாக எவனொருவரும் தவறு செய்யமுடியாதபடி அமைந்துள்ளது. அப்படியே தவறு செய்தாலும் எளிதில் கண்டிபிடித்து தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். தவறு செய்பவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்ற பயமும் உள்ளது. தண்டனைக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆனால் இந்தியாவில் மனிதனுக்கும் மதிப்பு இல்லை, தண்டனைக்கும் மதிப்பு இல்லை. காசுக்கும், செல்வாக்கிற்கும் தான் மதிப்பு. அதைவிட தவறு செய்பவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் அங்கே. இவை அனைத்தையும் சிறிது நினைத்துப்பார்த்தால் நமக்கு உண்மை புலப்படும் ஏன் நம் அனைவருக்கும் இந்த அமெரிக்க மோகம் உள்ளது என்று.
நாம் என்னதான் நம் இந்தியாவை குறை சொல்லிக்கொண்டிறிந்தாலும், நாமும் இந்தியாவின் இந்த நிலைமைக்கு காரணம்தான். தூய்மையை நம் இந்தியர்கள் இங்கு மட்டும் வாய்கிழிய பேசி கடைபிடிப்பார்கள். ஆனால் விடுமுறைக்கு இந்தியா சென்றால் தூய்மையை மறந்து இருக்கும் இடங்களை குப்பை தொட்டிகலாக்கி விடுவார்கள். இங்கு மட்டும் எங்கு சென்றாலும் வரிசையில் நின்று பொறுமையாக காத்துக்கிடப்பார்கள். இந்தியா சென்றால் வரிசைகள் இருந்தாலும் காத்துக்கிடப்பதற்கு தயங்குவார்கள். எப்படியாவது காரியத்தை எளிதில் சாதிப்பதற்கு முயலவும் செய்வார்கள். இங்கு வாழ்வதை ஒரு காரணமாக வைத்துகொண்டு இந்தியாவில் தம் குடும்பங்களுக்குள் நடைபெறும் பல இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கு கூட போக மறுத்துவிடுவார்கள். இந்த இந்தியர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த விதத்தில் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் எவளவோ மேல் என்று கூறியே ஆகவேண்டும்.
இங்கு வந்ததும் சகிப்பு தன்மை, பொறுமை, ஞாபக திறன், இவையில் ஒன்று கூட இல்லாமல் மறைந்தே போனது நம்மில் பலருக்கு. எந்த வித சவால்களும் இல்லாமல் வாழ்க்கையை அது ஓடும் பாட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் இங்கே. இங்கு இருக்கும் எந்த வசதிகளும் இல்லாமல் வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துகொண்டு வாழ்கிறார்களே இந்தியாவில், அந்த வாழ்வு நிலைதான் தனி மனித வாழ்க்கையை முன்னேற்றும்.
நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் அமெரிக்காவிலும் நல்ல சாலை வசதிகளும் சுகாதார வசதிகளும் இல்லாமலும் எவ்வளவு நகரங்கள் உள்ளது என்று. நாம்தான் Las vegas, Las angles, chicago, New york, New jersey இவைகளைத்தானே அமெரிக்கா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்திய வரலாறே நமக்குத்தான் சரியாக தெரியாதே, இப்படி இருக்கையில் எங்கிருந்து நமக்கு அமெரிக்க வரலாறு.
வல்லரசான இந்த அமெரிக்காவிற்கும் கூட நாம் தான் தேவைபடுகிறோம் உழைப்பதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் என்று நினைக்கையில், கண்டிப்பாக இந்தியா மார்தட்டி பெருமைப்பட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.