ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் 2025 பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை ஊர்கூடி பொங்கல் வைக்கும் விழாவாக சனிக்கிழமை, ஜனவரி 18 ஆம் தேதியன்று ஆஸ்டின் ஹிந்து கோவிலில் மிகவும் கோலாகலமாக நடத்தியது. ஆஸ்டின் மாநகரத்தில் முதல் முறையாக விறகு அடுப்பில் பொங்கல், ஆதி தாளம் குழுவின் பறை இசையுடன் கலகலப்பாக தொடங்கிய விழாவில் தொடர்ந்து ரைகல் நடனக் குழுவின் கும்மி நடனம், பேரவை மரபுக்கலை பட்டறைக் குழுவின் பொங்கல் பாடல், வாகை குழுவின் சிலம்பாட்டம், கோலப்போட்டி என ஒரு தமிழகத்து கிராமமே உருவாகிவிட்டது.

நடுக்கும் குளிரிலும், பலத்த காற்றிலும் கூட சரியான நேரத்திற்கு வந்து பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிய 40 குடும்பங்களுக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் பிரத்தியேகமாக வடிவைக்கப்பட்ட அடுப்பு, விறகு, பொங்கலுக்கு தேவையான பொருட்கள், கரும்பு என அனைத்தையும் வழங்கியது.

ஜர்னிமேன் குரூப்பின் நிறுவனரும், தலைவருமான திரு. சாம் குமார் அவர்கள் தலைமை உரையுடன் அவரது மனைவி திருமதி. ஹேமா குமார் அவர்கள் அடுப்பில் அக்னியை ஏற்றி தொடங்கி வைத்த பொங்கல் விழா 12 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

AHT சேர்மன் முனைவர். திரு. சதாசிவன், AHT தலைவர் திரு. கிருஷ்ணா கொப்புரு, ஆஸ்டின் ஹிந்து கோவில் நிர்வாகம், தோரண டிசைன்ஸ், ஆதி தாளம் குழு, வாகை குழு, ரைகல் குழு, பேரவை மரபுக்கலை பட்டறைக் குழு, கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவர்கள், உதவி செய்த தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்!